Monday, 28 November 2011

தமிழக அரசின் 7 துறைகளில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை!


தமிழக அரசின் 7 துறைகளில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை என முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்துள்ளதாக அகில இந்திய ஊழல் எதிர்ப்புக் குழுவின் மாநிலத் தலைவர் மு. ரகுநாதன் தெரிவித்தார்.
  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் 1971ஆம் ஆண்டு அனைத்திந்திய ஊழல் எதிர்ப்பு குழு அமைக்கப்பட்டது. அதன் தற்போதைய தலைவராக மாயாபதி திரிபாதியும், செயல் தலைவராக டி.எஸ். கில்லும், தேசிய முதன்மை ஆலோசகராக முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீபாலும் உள்ளனர்.

 நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் ஊழலை ஒழிப்பதே இந்த குழுவின் பிரதான நோக்கமாகும். தமிழ்நாட்டில் லஞ்சம் கொடுக்காமல் எந்தக் காரியமும் நடப்பதில்லை.

 பதிவுத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, வட்டாரப் போக்குவரத்து துறை, மின்துறை, காவல்துறை, மருத்துவத்துறை ஆகிய 7 துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது என்றும் அத்துறைகள் மீது நடவடிக்கை தேவை என்றும் முதல்வரிடம் கடந்த ஆண்டு நவம்பரில் கோரிக்கை வைத்தோம். அதன்படி அந்த துறைகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் சமீபகாலமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 அதே சமயம், அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் முகவரி, தொலைபேசி எண்களை எழுதி வைத்துள்ளதற்கு அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

 லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகளை தாற்காலிகமாக பணிநீக்கம் செய்தால் மட்டுமே போதாது. அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதோடு நிரந்தரப் பணிநீக்கம் செய்து கடுமையான தண்டனை வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

 லஞ்ச ஒழிப்பு வாரியம் அமைக்கப்பட வேண்டும் என ஏற்கெனவே கோரிக்கை வைத்துள்ளோம். அதை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.

 அதன் தலைவராக ஸ்ரீபாலை நியமித்து ஊழல் எதிர்ப்பு குழுவினரை உறுப்பினர்களாக்க வேண்டும்.

 தமிழ்நாட்டில் சமீபகாலமாக விவாகரத்துகள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. அதற்கு ஆணுக்கும், பெண்ணுக்கும் உடல்ரீதியிலான குறைபாடுகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. எனவே, திருமணத்துக்கு முன்னர் ஆணுக்கும், பெண்ணுக்கும் மருத்துவச் சான்றிதழ் பெறும் செயல்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.

 கல்வி நிறுவனங்களில் பெருகி வரும் நன்கொடை வசூலை தடுக்க தனியாக கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

 நியமனம்:முன்னதாக, குழுவின் தென் மண்டல நிர்வாக செயலராக நியமிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த பி.டி. பட்டுக்குமாருக்கு அடையாள அட்டையை வழங்கினார் ரகுநாதன்.

 தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பட்டுக்குமார், திருநெல்வேலி மாவட்டத் தலைவர் முகம்மது மொய்தீன், செயலர் எம். பாலசுப்பிரமணியன், மகளிர் பிரிவு செயலர் அமீர்பாத்திமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுப்பிக்கப்படாத தமிழக அரசின் போக்குவரத்துக் கழக இணையதளம்


மதுரை: அரசு போக்குவரத்துத் துறையின் இணையதளம் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாததால், எவ்வித விபரத்தையும் பெறமுடியாமல் உள்ளது.

மக்களுக்கு கிடைத்த இரண்டாவது சுதந்திரம் போன்றது தகவல் அறியும் உரிமைச் சட்டம். இச்சட்டம் அமலானதில் இருந்து 180 நாட்களுக்குள் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் தம் துறை சார்ந்த விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்து, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படையாக அமைக்க வேண்டும் என்பது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது வரும் மாறுதல்களையும் அதில் உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு போக்குவரத்துத் துறை தொடர்பான விபரங்கள், அரசாணைகள், அரசு கடித விபரங்கள் இணைய தளங்களில் பதிவு செய்யப்படாமல் உள்ளன. அதேபோல வட்டார போக்குவரத்து அலுவலகங்களை கட்டுப்படுத்துகிற போக்குவரத்து ஆணையர் அலுவலகம் தொடர்பான விபரங்களும் இணைய தளத்தில் இல்லை.
* போக்குவரத்து துறையில் 2007 வரை அரசாணைகள் உள்ளன. அதன் பின் 2010ல் 3 அரசு கடிதங்களும், 2 அரசாணைகளுமே பதிவேற்றப்பட்டுள்ளன. அதன் பின் இன்றுவரை அரசாணை, அரசு கடித விபரங்கள் இல்லை.
* மாநகர போக்குவரத்துக் கழகம் என்ற தொடு இணைப்பை தட்டினால், 2 ஆண்டுகளுக்கு முன் பணி ஓய்வு பெறும் சமயம் லஞ்ச ஒழிப்புத் துறையால் பிடிக்கப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவரின் பெயரே இன்னும் நிர்வாக இயக்குனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
* அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் என்ற தொடு இணைப்பிலும் அவருடைய பெயரே நிர்வாக இயக்குனர் என்ற பெயரில் உள்ளது.
* மாநகர போக்குவரத்துக் கழக இயக்குனர்கள் குழுமத்தின் சேர்மன் என்பதற்கு, தற்போதைய முதன்மை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கியின் பெயர் உள்ளது. ஆனால் அவருக்குப் பின் அதுல்யமிஸ்ரா, ரமேஷ்ராம் மிஸ்ரா, முகமது நசிமுதீன் என 3 பேர் மாறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
* சாலைப் போக்குவரத்து நிறுவனம் என்ற தொடு இணைப்பில் சுமார் 2 ஆண்டுக்கு முன்னர் இயக்குனராக இருந்தவர் பெயர்தான் உள்ளது.
* ஆர்.டி.ஓ., அலுவலகங்களை கட்டுப்படுத்தும் போக்குவரத்து ஆணையாளர் அலுவலக தொடு இணைப்பை தொட்டால், இணையதளம் கட்டுமான பணியில் உள்ளது என வருகிறது.
* தனியாக போக்குவரத்துக் கழகங்களின் இணைய தளங்களில் சென்று பார்த்தாலும், எந்த விபரமும் "அப்டேட்' செய்யப்படாததால் மிகப் பழைமையான விபரங்களுடன் தளங்கள் உள்ளன.
* போக்குவரத்து கழகங்களை பற்றி முக்கியமாக புறநகர் தடங்கள், நகர தடங்கள் விபரம், பஸ்களின் எண்ணிக்கை, முன்பதிவு வசதி உள்ள தடங்கள் போன்ற விபரங்கள் எதுவும் இணைய தளத்தில் பதிவு செய்யப்படவில்லை. இவ்வாறு போக்குவரத்துக் கழக இணையதளம் எதற்கும் பயன்படாத நிலையில் உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களே எந்த விபரத்தையும் பெற முடியாது.

கூடங்குளம் அணுவுலைத் திட்டம்: தமிழக கட்சிகளின் நிலைப்பாடு என்ன..?




கன்னியாகுமரி,திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து "அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்" என்ற அமைப்பினை
ஏற்படுத்தி கூடங்குளம் அணுவுலைக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அண்மையில் ஜப்பானில் புகுசிமா அணுவுலைகள் வெடித்து பயங்கரமான
விளைவுகளை ஏற்படுத்தியுள்ள சூழலில் கூடங்குளம் அணுவுலையை மூடவேண்டும் என்ற கோரிக்கையை மையமாக வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டினை அறிவிக்கவேண்டும் என்று கோரி அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டு கடிதம்
அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நாகர்கோவிலில் நடைபெற்றது. அப்போது  "அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்" ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.சுப.உதய குமார் கூறியதாவது;




மத்திய சுற்று சூழல் அமைச்சக குழு ஒன்று கூடங்குளம் அணுஉலைகள் 3,4,5,6 கடலோர  ஒழுங்குமுறை சட்டத்தை (1991) மீருவதாகப் படுவதால் அவற்றிற்கு அனுமதி அளிக்க
முடியாது என அறிவித்திருக்கிறது. இந்த உலைகளை குளிர்விக்கும் தண்ணீர்  கடலுக்குள் விடப்பட்டால் மீன் வளம், உணவு பாதிக்கப்படும் அபாயத்தை அந்த  குழு கோடிட்டு காட்டியிருக்கிறது. இந்த அறிக்கையை பெற்றுக் கொண்ட அமைச்சர் ஜெயராம் ரமேஷ், கூடங்குளம் உலைகள் 3,4,5,6 கடலோர ஒழுங்குமுறை சட்டத்தை மீருகின்றனவா  என்றுக் கண்டறியப்படும் என அறிவித்திருக்கிறார்.


இது மக்களை திசை திருப்புகின்ற ஒரு கபட நாடகம். கூடங்குளம் உலைகள் 1,2 பற்றி அந்த குழுவோ, அமைச்சரோ வாய் திறக்காமல் இருப்பது ஏன்? உண்மையிலேயே மக்கள்
நலம் பேணுகின்ற அரசாக இருந்தால் ஒட்டு மொத்த கூடங்குளம் அணுமின் திட்டத்தை உடனடியாக இழுத்து மூட வேண்டாமா?.


இதற்கிடையே கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடந்த மாதிரி எரிபொருள் ஆய்வு (Dummy Fuel Test) தோல்வி அடைந்து விட்டதாக ஒரு வதந்தி உலவி வருகிறது. இது பற்றி மத்திய அரசோ, அணுசக்தி துறையோ, கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகமோ எதுவும் பேசவே இல்லையே ஏன்?




மகாராஷ்டிரா மாநிலம் ஜெய்தாபூரில் கட்டப்படும் அணுஉலை
திட்டத்தை சிவசேனா கட்சியும், இடதுசாரி கட்சிகளும் தீவிரமாக எதிர்க்கின்றன.அதுபோல மேற்கு வங்காளத்தில் ஹரிபூரில் கட்டப்படவுள்ள அணுமின் நிலையத்தை
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும், மாவோயிஸ்டுகளும் பலமாக எதிர்க்கின்றன.

ஆனால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் கல்பாக்கம், கூடங்குளம் அணுஉலை(கொலை) பூங்காக்கள் பற்றி எதுவுமே பேசாது வாய் மூடி மௌனிகளாக இருக்கின்றனர். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவில் தமிழகத்தின் தலைபகுதியிலும், கால் பகுதியிலுமாக மிக பெரிய அணுமின் பூங்காக்கள் கட்டப்படுகின்றன. 2004 -ம் ஆண்டு நடந்த சுனாமி இரு உலைகளையுமே நேரடியாக பாதித்தது. கூடவே தேனீ மாவட்டம் போடி மேற்குத் தொடர்ச்சிமலை பகுதியில் நியுட்ரினோ அணுதிட்டம் ஓன்று துவக்கப்பட இருக்கிறது.

ஜப்பான் நாட்டில் உள்ள புகுஷிமா விபத்து நடந்த பிறகும் தமிழக அரசியல் கட்சிகளும், தலைவர்களும் வாய்பொத்தி நிற்பது வேதனையாக உள்ளது. கேரளாவில் உள்ள அனைத்து
கட்சிகளும், தலைவர்களும் அம்மாநிலத்தில் அணு உலைகள் கட்டுவதை ஏகமனதாக எதிர்க்கின்றனர். ஆனால் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று பேசுகின்ற நம்மவர் பாராமுகமாக இருக்கின்றனர்.

அதுபோலவே மதகுழுமங்களும், பெரும்பான்மை தொண்டு  நிறுவனங்களும் தமிழ்மக்களை நிர்க்கதியாக நடுத்தெருவில் விட்டுவிட்டு அவரவர் சுயலாபங்களை பார்த்துக் கொண்டு சுகமாக இருக்கின்றனர். இந்த அரசியல் கட்சிகளும், தலைவர்களும், மதகுழுமங்களும், தொண்டு நிறுவங்களும், கூடங்குளம், கல்பாக்கம், தேனீ பற்றிய தங்கள் நிலைபாட்டை தமிழ் மக்களுக்கு  அறியத்தர வேண்டும்.




தொடர்ந்து மவுனம் காத்தால் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் நாங்கள் இறங்குவோம் என்று தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவின் பிற மாநிலங்களில் அரசியல் கட்சிகள் மக்களின் நியாயமான எதிர்ப்பிற்கு  தங்களது ஆதரவினை நேரடியாகவும் மறைமுகமாகவும் கொடுத்து மக்கள் விரோத
திட்டங்களை தங்களது பகுதியில் இருந்து விரட்டியடிக்கும் போது தமிழகத்தில் மட்டும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு சாதகமாக இலாத நிலைதான் காணப்படுகின்றது. எனவே தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது
நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிப்பதோடு மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்குடன் செயல்படுத்தப்படும் அணுவுலைத் திடங்களை தமிழகத்தை விட்டு விரட்ட
முன்வரவேண்டும் என்பதே நமது ஆவலாகும்.

அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை எச்சரிக்கை


சென்னை, நவ.25    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழி வலுவடைந்து தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.சென்னையில் இன்று காலை வரை 10 செ.மீட்டர் வரை மழை பெய்துள்ளது.வடமேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழி தற்போது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவெடுத்து கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் அநேக இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னை நகரில் நேற்று  இரவு முதல் விடிய விடிய பலத்த மழை கொட்டியது. இதேபோல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த மழை நேற்றும் இன்றும் கொட்டியது. இதன் காரணமாக சென்னை கடலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை நகரில் நேற்றும் இன்றும் விடாத பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. இவ்வாறு தேங்கிய நீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
புதுச்சேரி மாநிலத்தில் பலத்த மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டன.  இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 7 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது.  மேலும் சாலைகளில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உழவன் வாழ்வில் வறுமை ஏன்?



ஊருக்கு உணவு படைக்கும் உழவன் பட்டினி, பஞ்சம் வறுமை, கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளான். பாழடைந்த கிணறு, பூச்சு மருந்து, முழுக்கயிறு கொண்டு தற்கொலையில் இறங்கி விடுகிறான்.
விடுதலை பெற்ற இந்தியாவில் கிராம சுயராஜ்யம் என காந்தியார் சொன்னார். பின் ஆட்சிக்கு வந்த அவரின் சீடர்கள் கிராம சுயராஜ்யமா? என்று கேள்வி கேட்டு உழவர்களை வாட்டி விட்டனர்.
நேரு காலத்தில் முதல் ஐந்தாண்டு திட்டத்தில் விவசாயத்திற்கு வழங்கப்பட்ட முதலீடு 15 சதம். 2002-2007ல் வேளாண்மைக்கு ஒதுக்கீடு செய்தது வெறும் 1.3 சதம். 1951ல் மக்கள் தொகையில் 72 சதம் விவசாயிகள். ஆனால் தற்போது 58 சதம் மட்டுமே. காரணம் என்ன? விவசாயத்தை ஆட்சியாளர்கள் புறக்கணித்து விட்டனர். இதுவரை (1997லிருந்து 2008 வரை) தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1,82,936. ஆனால், இன்று வரை 2 லட்சத்து 20 ஆயிரம் என்று தற்கொலை எண்ணிக்கை கூடியுள்ளது. இவர்களின் சராசரி வயது 25லிருந்து 45 வரை ஆகும்.
விவசாய செய்நிலங்கள் பரப்பு குறைந்துவிட்டது. நகர விரிவாக்கத்தில் வயல்கள், நீர்நிலைகள் வீடுகளாகிவிட்டன. எதிர்காலத்தில் விவசாய பூமிகள், மொகஞ்சதாரா, ஹரப்பா போன்ற வரலாற்றுச் சின்னங்களாகக் காட்சி அளிக்கலாம்.
ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களுக்கு எத்தனை வகையான கார்கள் மற்றும் வசதிகள். ஆனால் பூர்வீகமாக சொந்த நிலத்தை வைத்து கண்ணியமாக மரியாதையாக வாழ்ந்த உழவர் வாழ்வில் இன்று மண். இது இன்றைய நிலை. வேளாண்மை நாட்டின் முதுகெலும்பு. அந்த முதுகெலும்பு இப்போது முறிந்து விட்டது.
3. அது அக்காலம்!
மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்டை உழுதுபோடு செல்லக்கண்ணு
என்ற கவிஞர் மருதகாசியின் பாடலை, மக்களைப் பெற்ற மகராசி திரைப்படத்தில் பார்த்தது இன்றைக்கும் ரசனையோடும், இனிமையோடும் கேட்க முடிகின்றது. அந்தப் பாட்டில் சொல்லப்பட்ட ஆத்தூர் கிச்சலிசம்பா என்பது இன்றைக்கு எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. வீரிய விதைகளால் உற்பத்தி செய்யும் அரிசியில் சுவையும் இல்லை, சத்தும் இல்லை. பூச்சிக்கொல்லி இரசாயன உரங்களைப் போட்டு உற்பத்தி செய்கின்ற நெல் மற்ற விவசாய உற்பத்தி பொருட்களை ஏதோ ரப்பரை உண்பதுபோல உட்கொள்கிறோம். அதே பாட்டில் பொள்ளாச்சி சந்தை, விருதுநகர் வியாபாரி, மதுரை ஜில்லா ஆட்கள் என்பது இன்றைக்கு மறைந்து விட்டது. சந்தைகளுக்குச் சென்று விவசாயிகள் பேரம் பேசி விற்கின்ற காலங்கள் போய், இன்றைக்குப் பாரம்பரிய விவசாய முறைகளும் மாறி, வணிகரீதியாக எல்லாம் ஆகிவிட்டன. ஆன்லைன் வர்த்தகம் என்ற நிலையில் மருதகாசியின் பாட்டு அர்த்தமற்றுப் போய்விட்டது என்ற வேதனையும் ஆதங்கமும் நமக்கு ஏற்படுகின்றது. வாஷிங்டன் ஆப்பிள், ஆஸ்திரேலியா ஆரஞ்சு, பி.டி.கத்திரிக்காய் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். கூட்டுக் குடும்பங்களாக இருந்த நிலைமை போய், சம்பாதித்த பணத்தை எண்ணி அம்மாவிடம் கொடு என்ற மருதகாசியின் பாடல் வரிகளும் வலுவிழந்து காணப்படுகிறது. கூட்டுக் குடும்பங்களாக இருந்த நிலையில் மாமியார், மாமனார் உறவுகளும் இன்றைக்குப் பொய்யாகி போகின்ற நிலை உள்ளது. இதற்கெல்லாம் காரணம் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற நிலையில், தனக்கு என்ன கிடைக்கும் என்ற உணர்வு மேலோங்கியதால் மருதகாசியின் பாட்டில் அர்த்தங்கள் ஆயிரம் இருந்தும், தற்போதைய சூழலில் அர்த்தமில்லாமல் ஆகிவிட்டது என்ற கவலைதான் அதிகமாகிறது.
அது அக்காலம்!

Sunday, 20 November 2011

எழுத்துக்கள் எத்தனை?




தமிழ் எழுத்துக்கள் - 247 , ஆங்கிலம் - 26 , இத்தாலி - 20 , லத்தீன் - 22 , கிரேக்கம் - 24 , ஜெர்மன் - 26 , பிரெஞ்ச் - 26 , ஸ்பானிஷ்- 27 , அராபிக் - 28 , துருக்கி - 25 , பாராசீகம் - 31 , சமஸ்கிருதம் - 48 , சீனமொழி - 214 .

அழிவுக்கு விதைகள் — விதையின் பிடியில் உலகம் .

‘விதை’யின் பிடியில் உலகம் (இனி பேரழிவு ஆயுதங்கள் தேவை இல்லை; விதைகளே போதுமானவை!)
மகாராட்டிர மாநிலம் யோவத்மல் மாவட்டத்தின் சீங்காபூர் கிராமத்திலிருந்து கடந்த ஆண்டு, இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு மிகவும் விசித்திரமான ஓர் அழைப்பு அனுப்பப்பட்டது. இவர்கள் இருவரையும் அந்த கிராமத்தில் நடைபெற இருந்த விழாவை தொடங்கி வைக்க வருமாறு, அனைத்து கிராம மக்களும் ஒன்றிணைந்து வேண்டுகோள் விடுத்திருந்தனர். விவசாயம் பொய்த்துப் போன சூழலில், கடன்களைக் கட்ட இயலாமல், தங்கள் பசியைப் போக்க கதியற்று அந்த கிராமத்தினர் அனைவரும் தங்களுடைய சிறுநீரகத்தை விற்க முன்வந்தனர்.
அந்த விழாவை தொடங்கி வைக்கத்தான் அப்துல் கலாம் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக அவர்கள் அழைத்திருந்தனர். அந்த அழைப்பு புது தில்லியை சென்றடைந்த நேரம், அடுத்த ஆண்டு கொண்டாடவிருக்கும் 60ஆவது சுதந்திரநாள் கொண்டாட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது.
மகாராட்டிர மாநிலம் வார்தா மாவட்டத்து டோர்லி கிராமத்தின் மரங்களிலும், ஊர் எல்லையிலும் பரவலாக அறிவிப்புகள் : ‘கிராமம் விற்பனைக்கு உள்ளது’. அடுத்த கிராமமான ஷவானி ரேகிலாப்பூரில் மொத்த கிராமமும் தங்களை கூட்டுத் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை அனுப்பியிருந்தது. பஞ்சாபில் உள்ள மல்சீங்வாலா கிராமத்தினர் வங்கிகளுக்கு அளிக்க வேண்டிய மொத்த தொகை ரூபாய் அய்ந்து கோடி. கந்து வட்டிக்காரர்களுக்கு அளிக்க வேண்டிய ரூபாய் 2.5 கோடி. இதைக் கட்ட முடியாத அந்த பஞ்சாயத்து ஒன்று கூடி, கிராமத்தின் மொத்த 1800 ஏக்கரையும் ஏலம் மூலம் விற்க ஆயத்தமானது.
கர்நாடகாவுக்கு அருகில் உள்ள ஆந்திரத்தின் வழியில் தற்கொலை விகிதத்தில் உயர்வு காணப்படுகிறது. இரு மாநிலங்களும் கணினி மென்பொருள் தொழில் நோக்கி சாய்வு கண்டிருப்பதால், அவற்றின் கண்களுக்கு இந்த சாவுகள் ஒரு பொருட்டே அல்ல. நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 65 சதவிகிதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள்தான் இந்த நூறு கோடி மக்களின் பசியைப் போக்குபவர்கள். பசியைப் போக்கும் நடவடிக்கையில் கடந்த பத்தாண்டுகளில் 1,50,000 விவசாயிகள் பூச்சிக் கொல்லி அருந்தி தங்களை மாய்த்துக் கொண்டனர். இருப்பினும் எந்தப் பாடமும் கற்காத நம் அரசுகள், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தொண்டாற்றுவதில் அதிதீவிரமாக செயல்படுகின்றன.
1985 இல் கிடைத்த விலையில் பெரிய மாற்றம் எதுவும் விளைபொருட்களுக்கு கிடைத்திடவில்லை. ஆனால், இடு பொருட்களின் விலை 34 மடங்கு உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் அய்ரோப்பாவில் விவசாயிகளுக்கு அந்த அரசுகள் மானியத்தை வழங்கியிருக்கின்றன. ஆனால், அந்த நாடுகளிலிருந்து இந்தியா நோக்கி வரும் பரிந்துரைகள் ‘மானியங்கள் கூடாது’ என உத்தரவிடுகின்றன. பசுமைப் புரட்சியின் பெயரால் ரசாயனக் கழிவுகளை கடந்த 40 ஆண்டுகளாக நம் பூமியில் கொட்டி, மொத்த நிலத்தின் வளத்தையும் பாழடித்து விட்டார்கள். நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்து, மண் செத்துக் கிடக்கிறது. செத்த மண்ணுடன் உரையாடும் விவசாயியும் சாகிறான்.
1986 இல் ‘பம்பர்ஸ் சட்டத்திருத்தம்’ (Bumper’s Amendment) அமெரிக்காவில் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின்படி, உலக அளவில் நடக்கும் விவசாயம் தொடர்புடைய ஆய்வுகளுக்கு, அது வரையிலும் வழங்கப்பட்ட அமெரிக்க நிதியுதவியை நிறுத்த வழிவகுக்கும் சட்டம் அது. விவசாய நூல்களைப் பதிப்பித்தல், மாநாடுகள் நடத்துதல் என ஏராளமான நடவடிக்கைகள் உலகெங்கிலும் பாதி வழியில் திசை அறியாது நின்றன. இவை அமெரிக்க உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியைத் தடுத்திடும் என்பது அவர்களது வாதம். இந்த சட்டத்திற்குப் பிறகு, அமெரிக்காவை சேர்ந்த 20 நிறுவனங்கள் மட்டுமே உலகளவில் இத்துறையில் கோலோச்ச வழி செய்தது.
உலகின் மூன்றில் ஒரு பங்கு கச்சா எண்ணெயை தன் வசப்படுத்திய பிறகு, தற்பொழுது அமெரிக்காவின் மொத்த பார்வையும் உணவு சந்தையை நோக்கி திசை திரும்பி உள்ளது. உலகத்தின் பசியைப் போக்க கிளம்பிய புதிய தேவதூதராக காட்சியளிக்கிறார் ஜார்ஜ் புஷ். பசியைப் போக்கும் அருமருந்துடன் அவர் உலகை வலம் வரத் தொடங்கி விட்டார். அவரது கைகளில் மரபீனி மாற்றம்(GENETIC ENGINEERING) செய்யப்பட்ட விதைகள் உள்ளன. இந்த ‘விதை’களில்தான் உலகின் பசியை, வறுமையைப் போக்கும் மந்திரம் பொதிந்துள்ளதாக அவர் கூறுகிறார்.
ஆயுத நிறுவனங்களைத் தொடர்ந்து ஜார்ஜ் புஷ் அலுவலகத்தில் அதிக செல்வாக்கு செலுத்துபவை, உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்கள்தான். இந்த நிறுவனங்கள் உலகின் பல நாடுகளில் நுழைய முடியாமல் தவிக்கின்றன. அய்ரோப்பா அடுத்த அய்ந்தாண்டுகளுக்கு தங்கள் திசை பக்கம் வரக் கூடாது என அறிவித்துவிட்டது. இந்த அறிவிப்பால் அமெரிக்க நிறுவனங்கள் கதிகலங்கியுள்ளன. அமெரிக்க அரசின் தொழில் பிரதிநிதி ரோபர்ட் சோலிக், இந்தத் தடை அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்றும், உயிரியல் தொழில்நுட்ப வளர்ச்சியை பாதிக்கிறது என்றும், இறுதியாக அய்ரோப்பாவின் இந்தத் தடை உலகில் பட்டினியை அதிகரிக்கும் என்றும் மிரட்டுகிறார். உலகின் மொத்த விதைகளையும் இந்த நிறுவனங்கள் திருடி தங்கள் வசம் வைத்துள்ளன.
இதில் இந்தியாவிலிருந்து மட்டும் 1,50,000 நிலைத்திணை வகைகள், அமெரிக்க உயிரியல் ஆய்வுக் கூடங்களில் உள்ளன. அமெரிக்க அரசின் விவசாய அமைச்சகமும், உயிரியல் தொழில்நுட்ப வல்லுநர்களும் ஏராளமான இந்தியத் தொண்டு நிறுவனங்களைப் பணியில் அமர்த்தினர். கடந்த அய்ந்தாண்டுகளாக இந்தியா முழுவதிலும் இந்த 1,50,000 செடி வகைகள் குறித்த மரபான அறிவை சேகரித்து வருகிறார்கள். இந்த திட்டங்களுக்காக பல பன்னாட்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கான தொகையை ஒதுக்கி வருகின்றன. அதில் குறிப்பாக ‘போர்டு’ நிறுவனம் விதைகள் பற்றிய தகவல்களை இரு தலைப்புகளில் சேகரித்து வருகிறது.
1. ‘பயோடெக்’ சார்ந்த அறிவியல் தகவல்கள்
2. வாய்மொழி வரலாற்றில் இருக்கும் தகவல்களை, நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வுகளின் மூலம் பெறுவது.
எனவே, உங்கள் கிராமங்களை நோக்கி வரும் ஆய்வாளர்களிடம், ‘யாருக்காக இந்த ஆய்வை செய்கிறீர்கள்?’ என்ற கேள்வியை முதலில் எழுப்புங்கள். இந்த 1,50,000 நிலைத்திணை வகைகளை அமெரிக்காவிற்கு கள்ளக் கடத்தல் செய்தவர்கள், இந்தியாவின் உயர் பதவிகளில் சொகுசாய் வாழ்ந்து வருகிறார்கள். அடிமைகள் இருக்கும் வரை ஏகாதிபத்தியம் செழித்தோங்கும் என்பதில் அய்யமில்லை.
கலிபோர்னியாவின் சேக்ரமென்டோ டவுன் டவுனில் சூன் 23-25, 2007இல் ஒரு மாநாடு நடைபெற்றது. அமெரிக்க விவசாயத் துறை செயலர் ஆன் வெனேமன் விடுத்த அழைப்பின் பெயரில், 180 நாடுகளை சேர்ந்த விவசாய அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர். மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகள் தரும் நன்மைகள், லாபங்கள் குறித்த விவாதங்கள் இங்கு நடைபெற்றன. உலகின் பட்டினியை, பசியைப் போக்க தவம் செய்து வரும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு நீங்கள் ஒத்துழைக்க மறுத்தால், அரசியல் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.
இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்து வைத்துள்ள மரபீனி மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை ஒட்டுமொத்தமாக எல்லா நாடுகளும் அனுமதிக்கவில்லை. எனவே, ஆத்திரத்தில் அலையும் இந்த நிறுவனங்கள் தற்காலிக இடைவெளிகளை கண்டுபிடித்துள்ளன. பட்டினியால் வாடும் பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு உணவு உதவி அளிக்கப் போவதாகக் கூறி, இந்த விலை போகாத சரக்கை ஏற்றுமதி செய்கிறார்கள். அய்.நா. உலக உணவுக் கழகம், செஞ்சிலுவை சங்கம் என அனைத்து நிறுவனங்களும் இனி தங்கள் திட்டங்களுக்கு, உயிரியல் தொழில் நிறுவனங்களிடமிருந்து தான் கொள்முதல் செய்ய வேண்டும் என கட்டளையிட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் நடைமுறையில் உள்ள மதிய உணவுத் திட்டங்களில் இனி மரபீனி மாற்று உணவுகள்தான் வழங்கப்படும். தன் சொந்த தேசம் உண்ண மறுக்கும் தானியங்களை, மற்றவர்கள் மீது திணிப்பது உலகின் மிகப் பெரிய மனித உரிமை மீறல். அப்படி எந்த தேசமும் இனி இந்த நிறுவனங்களை அனுமதிக்க மறுத்தால் ஈராக், ஆப்கானிஸ்தான் கதிதான். பேரழிவு ஆயுதங்கள் அல்ல; விதைகளே போதுமானவை. இவை போக புதிய மரபீனி மாற்று விளை பொருட்கள் அங்காடியை ‘ராக்பெல்லர் பவுன்டேஷன்’ மற்றும் மேடிசன் நிறுவனம் தொடங்கியுள்ளது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இவர்கள் தங்கள் புதிய வியாபாரத்தை தொடங்குவார்கள்.
எய்ட்ஸ் நோயால் ஏராளமான ஆப்பிரிக்க நாடுகளில் கிராமப்புற ஆண்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. விவசாயக் கூலிகளின் பற்றாக்குறையை போக்கும் அந்த நாடுகளை, மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறார்கள். இந்த விதைகளைப் பயன்படுத்தினால் அதிக பூச்சிக் கொல்லி அடிக்க வேண்டியதில்லை, வேலை குறைவு என கதை அளந்து வருகிறார்கள். இவர்களின் இந்த ‘பி.டி.’ ரக விதையை பயன்படுத்திதான் விதர்பா, ஆந்திரப் பகுதி விவசாயிகள் பூச்சிக்கொல்லி தெளித்து, தெளித்து இறுதியில் கடன்களை சமாளிக்க முடியாமல் மிச்ச மீதி பூச்சிக்கொல்லியை தாங்களே குடித்து மாண்டனர். மேடிசன் நிறுவனத்தின் அடுத்த இலக்கு இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள். இவர்களின் வேலை புள்ளி விவரங்களைத் தயாரிப்பது, பஞ்சங்களை ஏற்படுத்துவது (யோக்கியன் வரான் சொம்பை எடுத்து உள்ள வை).
அமெரிக்க உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தொடர்ந்த அழுத்தம் காரணமாக, இந்தியா தனது கதவுகளை அகலத் திறந்துள்ளது. இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் மரபீனி மாற்று விதைகளை ஆய்வு நோக்கில் பயிரிட அனுமதி அளித்துள்ளனர். எராளமான காய்கறி, எண்ணெய் வித்துக்கள் என உணவு வகை ஆய்வுகள் நடக்கின்றன. ஆனால், இந்த ஆய்வுகள் முறைப்படி நிகழ்த்தப்படுவதில்லை. இந்திய தட்பவெப்ப சூழலுக்கு இவை உகந்ததா? நம் மண்ணில் இவை விளையுமா? என்பது போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகள் நம்முன் விடையின்றி நிற்கும்போது, நம் விஞ்ஞானிகள் மற்றும் அரசு செயலர்கள் இந்த விதைகளுக்கு நற்சான்றிதழ் வழங்கி வருகின்றனர். இதில் சமீபத்திய வேடிக்கை உயிரியல் தொழில் நுட்பத் துறையின் செயலர், ஜி.எம். உருளைக்கிழங்கில் 40 சதவிகிதம் புரதச்சத்து இருப்பதாக பேட்டியளித்தார். மறு நாள் அது 2.5 சதவிகிதம்தான் என ஆய்வு நிறுவனம் அறிவித்தது. இது போல் இனி எல்லா மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகள் குறித்த கட்டுக் கதைகளும் மடை திறந்த வெள்ளமாய் வரும். குடிமைச் சமூகமே எச்சரிக்கை!
இந்த ஆய்வுகள் நிகழ்த்தப்பட்ட எல்லா இடங்களிலும் நடந்த முறைகேடுகள் தற்பொழுது வெளிவருகின்றன. இந்த ஆய்வுக்காக குத்தகைக்கு எடுக்கப்பட்ட வயல்களில், அந்த வயலின் உரிமையாளர்களிடம் என்ன ஆய்வு நிகழ்த்தப்படுகிறது என தெரிவிக்கப்படுவதில்லை. அண்டை வயல் உரிமையாளர்களிடம் இந்தத் தகவல்கள் பரிமாறப்படவில்லை. அந்த மாநில அரசுகளிடம் அனுமதி பெறுவதில்லை. மரபீனி தொடர்புடைய இந்த ஆய்வுகளை கண்காணிக்க சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மரபீனி தொழில்நுட்ப அனுமதி குழு உருவாக்கப்பட்டுள்ளது (Genitic Engineering Approoval Committee- GEAC). இக்குழுவின் அனுமதியின்றி எந்த ஆய்வும் நிகழாது. இக்குழுவிற்கு விண்ணப்பிக்கும் முன்பே பஞ்சாயத்துக்களில் அனுமதி பெற வேண்டும். கிராம பஞ்சாயத்துகள் இனி இந்த அதிகாரத்தை செம்மையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கோக்கோகோலா நிறுவனத்தை பிளாச்சிமடாவிலிருந்து விரட்டியடித்ததில் அந்த பஞ்சாயத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் எல்லையோரத்தில் கேரளாவுக்குள் அமைந்துள்ள கிராமம் பிளாச்சிமடா. அங்கு கோக்கோ கோலா ஆலை பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. பிளாச்சிமடா மக்களும் அந்த பஞ்சாயத்தும் விழித்துக் கொண்ட பிறகு, அந்தப் பன்னாட்டு நிறுவனத்தால் ஆலை நடவடிக்கைகளை தொடர இயலவில்லை. இந்திய அளவிலான ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் மற்றும் உலகமயமாக்கல் எதிர்ப்பாளர்கள், முன்னணித் தலைவர்கள் பலரும் பிளாச்சிமடாவுக்கு கடந்த அய்ந்து ஆண்டுகளாக நடந்து வந்த மக்கள் இயக்கத்திற்கு வலு சேர்த்தாலும், பிளாச்சிமடா பஞ்சாயத்து அந்த ஆலையை ரத்து செய்த முடிவுதான் இந்தப் போராட்டத்தின் மிகப் பெரிய பலம். உச்ச நீதிமன்றம்கூட பஞ்சாயத்தின் தீர்மானத்தை மாற்ற முடியாமல் திணறியதைக் காண முடிந்தது. இதுபோலவே கங்கைகொண்டானில் சிவகங்கையிலிருந்து விரட்டப்பட்ட கோக் நிறுவனத்தை நிறுவ முயன்றபோதும், அங்கு பல்வேறு மக்கள் இயக்கங்கள் களமிறங்கிப் போராடினர். இதில் பங்கேற்ற பஞ்சாயத்து தலைவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இனி இத்தகைய ஆய்வுகளுக்காக எந்த பஞ்சாயத்திலும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் அனுமதி கோரினால், உடனடியாக கிராம அவை கூட்டப்பட வேண்டும். அதில் இந்த விதைகள் குறித்த ஆபத்துகள், தீமைகள் குறித்து விவாதங்கள் நடைபெற வேண்டும். அந்த விதிமுறைகள், எச்சரிக்கைகளைத் தெரிந்து கொண்டு, ஆய்வு நடக்கும் காலங்களில் அண்டைய வயல்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கலாம். மரபீனி மாற்றம் செய்ய நடைபெற்ற பயிற்சிகள் குறித்த வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. சம்பந்தப்பட்ட விஞ்ஞானிதான் இத்தகு ஆய்வுகளை நிகழ்த்த வேண்டும். இந்த வயலில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்குள் இதே பயிரின் மரபான ரகம் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது. எனவே, இந்திய பஞ்சாயத்துகள் விழிப்போடு இருந்தால், நம் எதிர்காலத் தலைமுறையையே சீரழிக்கக் கூடிய நிறுவனங்களை கால் பதிக்க விடாமல் விரட்டியடிக்க முடியும்.
தினமும் 32 கோடி பேர் பசியுடன் படுக்கைக்குச் செல்லும் நாடு இது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 6.5 கோடி டன் உணவு தானியங்கள் உபரி கையிருப்பாக இருந்த தேசமிது. ஒரிசாவின் காலாஹந்தி பகுதி மக்கள் தங்கள் கண் முன்னால் அரசு கிடங்குகளில் அரிசி அழுகி நாற்றமெடுப்பதை காண்கிறார்கள். ஓராண்டில் ஆறு மாதத்திற்கு ஒரு நேரம் மட்டுமே உண்ணுகிறார்கள். 6.5 கோடி டன் உபரி உணவு தானியங்களால் இந்தியாவின் பசியை, பட்டினியைப் போக்க இயலாதபொழுது -மரபீனி மாற்று தானியங்கள் மட்டும் எப்படி உலக மக்களின் பசியைப் போக்கும்?
உயிர்க்கொல்லிகள்
பூமிப்பந்தின் மேல் சில அங்குல அளவே படிந்துள்ள ‘மேல் மண்’ (Top Soil) தான் நாகரிகங்கள் தோன்ற அடிப்படையாக இருந்து வந்துள்ளது. இந்த மேல் மண் உருவாக பூமியின் பரிணாமத்தில் பூகோள ரீதியான பல அம்சங்கள் துணை புரிந்துள்ளன. இயற்கையான அரிமானத்தின் அளவை புதிய மண் உருவாவது மிஞ்சும்பொழுதுதான் மேல் மண் உருவாகிறது. இந்த மேல் மண்தான் பூமியில் உள்ள அத்துணை தாவரங்களையும், மரங்களையும் தன் சிசுவாய் வளர்த்தது. இதற்கு கைமாறாக இந்தச் செடிகளும், மரங்களும் மண் அரிமானத்தை தடுத்து உதவுகின்றன. மனித நடவடிக்கைகள், இந்த ஆயிரம் ஆண்டு பந்தத்தை சீர்குலைத்து விட்டன. உலக சாகுபடி நிலத்தில் முக்கால் பங்கு ‘மேல் மண்’ணை இழந்து விட்டது. கண்மூடித்தனமான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் இந்த கதி ஏற்பட மூலகாரணமாகும். உலகத்தை மீண்டும் நுண்ணுயிர்களுடன் கூடிய சத்தானதாக மாற்ற, வட்டார அளவிலான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இவை எதற்கும் அரசு உதவி என்பது கிஞ்சித்தும் இல்லை.