Monday, 28 November 2011

புதுப்பிக்கப்படாத தமிழக அரசின் போக்குவரத்துக் கழக இணையதளம்


மதுரை: அரசு போக்குவரத்துத் துறையின் இணையதளம் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாததால், எவ்வித விபரத்தையும் பெறமுடியாமல் உள்ளது.

மக்களுக்கு கிடைத்த இரண்டாவது சுதந்திரம் போன்றது தகவல் அறியும் உரிமைச் சட்டம். இச்சட்டம் அமலானதில் இருந்து 180 நாட்களுக்குள் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் தம் துறை சார்ந்த விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்து, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படையாக அமைக்க வேண்டும் என்பது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது வரும் மாறுதல்களையும் அதில் உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு போக்குவரத்துத் துறை தொடர்பான விபரங்கள், அரசாணைகள், அரசு கடித விபரங்கள் இணைய தளங்களில் பதிவு செய்யப்படாமல் உள்ளன. அதேபோல வட்டார போக்குவரத்து அலுவலகங்களை கட்டுப்படுத்துகிற போக்குவரத்து ஆணையர் அலுவலகம் தொடர்பான விபரங்களும் இணைய தளத்தில் இல்லை.
* போக்குவரத்து துறையில் 2007 வரை அரசாணைகள் உள்ளன. அதன் பின் 2010ல் 3 அரசு கடிதங்களும், 2 அரசாணைகளுமே பதிவேற்றப்பட்டுள்ளன. அதன் பின் இன்றுவரை அரசாணை, அரசு கடித விபரங்கள் இல்லை.
* மாநகர போக்குவரத்துக் கழகம் என்ற தொடு இணைப்பை தட்டினால், 2 ஆண்டுகளுக்கு முன் பணி ஓய்வு பெறும் சமயம் லஞ்ச ஒழிப்புத் துறையால் பிடிக்கப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவரின் பெயரே இன்னும் நிர்வாக இயக்குனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
* அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் என்ற தொடு இணைப்பிலும் அவருடைய பெயரே நிர்வாக இயக்குனர் என்ற பெயரில் உள்ளது.
* மாநகர போக்குவரத்துக் கழக இயக்குனர்கள் குழுமத்தின் சேர்மன் என்பதற்கு, தற்போதைய முதன்மை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கியின் பெயர் உள்ளது. ஆனால் அவருக்குப் பின் அதுல்யமிஸ்ரா, ரமேஷ்ராம் மிஸ்ரா, முகமது நசிமுதீன் என 3 பேர் மாறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
* சாலைப் போக்குவரத்து நிறுவனம் என்ற தொடு இணைப்பில் சுமார் 2 ஆண்டுக்கு முன்னர் இயக்குனராக இருந்தவர் பெயர்தான் உள்ளது.
* ஆர்.டி.ஓ., அலுவலகங்களை கட்டுப்படுத்தும் போக்குவரத்து ஆணையாளர் அலுவலக தொடு இணைப்பை தொட்டால், இணையதளம் கட்டுமான பணியில் உள்ளது என வருகிறது.
* தனியாக போக்குவரத்துக் கழகங்களின் இணைய தளங்களில் சென்று பார்த்தாலும், எந்த விபரமும் "அப்டேட்' செய்யப்படாததால் மிகப் பழைமையான விபரங்களுடன் தளங்கள் உள்ளன.
* போக்குவரத்து கழகங்களை பற்றி முக்கியமாக புறநகர் தடங்கள், நகர தடங்கள் விபரம், பஸ்களின் எண்ணிக்கை, முன்பதிவு வசதி உள்ள தடங்கள் போன்ற விபரங்கள் எதுவும் இணைய தளத்தில் பதிவு செய்யப்படவில்லை. இவ்வாறு போக்குவரத்துக் கழக இணையதளம் எதற்கும் பயன்படாத நிலையில் உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களே எந்த விபரத்தையும் பெற முடியாது.

No comments:

Post a Comment