ஊருக்கு உணவு படைக்கும் உழவன் பட்டினி, பஞ்சம் வறுமை, கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளான். பாழடைந்த கிணறு, பூச்சு மருந்து, முழுக்கயிறு கொண்டு தற்கொலையில் இறங்கி விடுகிறான்.
விடுதலை பெற்ற இந்தியாவில் கிராம சுயராஜ்யம் என காந்தியார் சொன்னார். பின் ஆட்சிக்கு வந்த அவரின் சீடர்கள் கிராம சுயராஜ்யமா? என்று கேள்வி கேட்டு உழவர்களை வாட்டி விட்டனர்.
நேரு காலத்தில் முதல் ஐந்தாண்டு திட்டத்தில் விவசாயத்திற்கு வழங்கப்பட்ட முதலீடு 15 சதம். 2002-2007ல் வேளாண்மைக்கு ஒதுக்கீடு செய்தது வெறும் 1.3 சதம். 1951ல் மக்கள் தொகையில் 72 சதம் விவசாயிகள். ஆனால் தற்போது 58 சதம் மட்டுமே. காரணம் என்ன? விவசாயத்தை ஆட்சியாளர்கள் புறக்கணித்து விட்டனர். இதுவரை (1997லிருந்து 2008 வரை) தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1,82,936. ஆனால், இன்று வரை 2 லட்சத்து 20 ஆயிரம் என்று தற்கொலை எண்ணிக்கை கூடியுள்ளது. இவர்களின் சராசரி வயது 25லிருந்து 45 வரை ஆகும்.
விவசாய செய்நிலங்கள் பரப்பு குறைந்துவிட்டது. நகர விரிவாக்கத்தில் வயல்கள், நீர்நிலைகள் வீடுகளாகிவிட்டன. எதிர்காலத்தில் விவசாய பூமிகள், மொகஞ்சதாரா, ஹரப்பா போன்ற வரலாற்றுச் சின்னங்களாகக் காட்சி அளிக்கலாம்.
ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களுக்கு எத்தனை வகையான கார்கள் மற்றும் வசதிகள். ஆனால் பூர்வீகமாக சொந்த நிலத்தை வைத்து கண்ணியமாக மரியாதையாக வாழ்ந்த உழவர் வாழ்வில் இன்று மண். இது இன்றைய நிலை. வேளாண்மை நாட்டின் முதுகெலும்பு. அந்த முதுகெலும்பு இப்போது முறிந்து விட்டது.
3. அது அக்காலம்!மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்டை உழுதுபோடு செல்லக்கண்ணு
என்ற கவிஞர் மருதகாசியின் பாடலை, மக்களைப் பெற்ற மகராசி திரைப்படத்தில் பார்த்தது இன்றைக்கும் ரசனையோடும், இனிமையோடும் கேட்க முடிகின்றது. அந்தப் பாட்டில் சொல்லப்பட்ட ஆத்தூர் கிச்சலிசம்பா என்பது இன்றைக்கு எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. வீரிய விதைகளால் உற்பத்தி செய்யும் அரிசியில் சுவையும் இல்லை, சத்தும் இல்லை. பூச்சிக்கொல்லி இரசாயன உரங்களைப் போட்டு உற்பத்தி செய்கின்ற நெல் மற்ற விவசாய உற்பத்தி பொருட்களை ஏதோ ரப்பரை உண்பதுபோல உட்கொள்கிறோம். அதே பாட்டில் பொள்ளாச்சி சந்தை, விருதுநகர் வியாபாரி, மதுரை ஜில்லா ஆட்கள் என்பது இன்றைக்கு மறைந்து விட்டது. சந்தைகளுக்குச் சென்று விவசாயிகள் பேரம் பேசி விற்கின்ற காலங்கள் போய், இன்றைக்குப் பாரம்பரிய விவசாய முறைகளும் மாறி, வணிகரீதியாக எல்லாம் ஆகிவிட்டன. ஆன்லைன் வர்த்தகம் என்ற நிலையில் மருதகாசியின் பாட்டு அர்த்தமற்றுப் போய்விட்டது என்ற வேதனையும் ஆதங்கமும் நமக்கு ஏற்படுகின்றது. வாஷிங்டன் ஆப்பிள், ஆஸ்திரேலியா ஆரஞ்சு, பி.டி.கத்திரிக்காய் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். கூட்டுக் குடும்பங்களாக இருந்த நிலைமை போய், சம்பாதித்த பணத்தை எண்ணி அம்மாவிடம் கொடு என்ற மருதகாசியின் பாடல் வரிகளும் வலுவிழந்து காணப்படுகிறது. கூட்டுக் குடும்பங்களாக இருந்த நிலையில் மாமியார், மாமனார் உறவுகளும் இன்றைக்குப் பொய்யாகி போகின்ற நிலை உள்ளது. இதற்கெல்லாம் காரணம் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற நிலையில், தனக்கு என்ன கிடைக்கும் என்ற உணர்வு மேலோங்கியதால் மருதகாசியின் பாட்டில் அர்த்தங்கள் ஆயிரம் இருந்தும், தற்போதைய சூழலில் அர்த்தமில்லாமல் ஆகிவிட்டது என்ற கவலைதான் அதிகமாகிறது.
அது அக்காலம்!


No comments:
Post a Comment